Sunday, June 03, 2007

விரக்தி

இரவின் மிதமான குளிரோடு
காற்று தடவிச் சென்றது.
தெரு கிடந்த அமைதியிலும்,
தொலை தூரத்தில் எங்கோ
ஊளையிடும் நாயின் ஈனக் குரலிலும்
இந்த இருளிலும்
இருக்கிறது எனது சோகம்.
நினைத்துப் பார்ப்பதற்கு
கடந்த இரவுகள் கூட ஒன்றும்
இனிப்பானவையல்ல எனும் போது
வற்றிவிட்ட இந்தக் கால்வாய்க்கும்
உவமையாக முடியாத நான்.
வாழ்வைப் போலவே,
எதற்கு?, ஏன்? என்றறியாப் பயணம்
பாதி வழியில் எங்கேனும்
எரிகிறதா ஒரு சிறு விளக்கு?

Friday, November 03, 2006

தனிமை

ஆக்கம்: தனேஸ்

இருள் உடுத்திப் பரந்து கிடக்கிறது இரவு
துயில் மறந்த விழி சுரக்கும் நினைவுகளோ
சுவர் மோதித் தெறிக்கிறது.

அன்று,
சுழன்றடிக்கும் காற்றில்
தலைவிரித்தாடும் பூவரசின் நிழலில்,
காலையும் மாலையும் கலவி செய்யும்
ஒரு மையப் பொழுதில்
நமது முதல் சந்திப்பின் சங்கடத்தில்
உன் நெற்றியில் வியர்வை.

பிறகு,
ஆத்மாக்களின் உரசல் கனிந்து
சடங்குகளுடன் முடிய
காதலை வெற்றி கொண்ட செருக்கு இருவருக்கும்

உன் சிரிப்பில் சிணுங்களில்
அலை அலையாய் நெளியும் உன் கூந்தலில்
புதைந்தழிந்த பொழுதுகள் எத்தனை....

காதலால் கடந்த நாட்கள்!
(ஞாபகம் இருக்கிறதா எதுவும்?)

தலைவிதி மாறிய தரித்திர நாளொன்றில்
மலை நோக்கியே நகரும் நதி
கரை தழுவ மறுக்கும் அலைகள்
நீ,
நான்!

காதலை உடைத்து வீசி,
நீ விலகி நடக்கையில்
சமரசம் பேசுதற்கும்
உனக்கு விளக்கமளிக்கவும்
இடங்கொடுக்காத கர்வம்
நிரம்பிக் கிடக்கிறது
காலியான மதுக் குவளையுள்ளே...

தனிமைச் சிறையில்
அலைந்து, உழன்று, திணறும் மனதில்
இரவுகள் தூங்குவதில்லை;
விடியல்கள் என்பதுவோ
தோன்றவதே இல்லை!

Monday, October 23, 2006

மறுபடியும் உன்னோடு...

ஆக்கம்: தனேஸ்

நிலவு பொழிந்து
நீண்டு கிடக்குமோர்
பின்னிராப் பொழுது
உன் நினைவுகள் மொட்டவிழ்க்க
தனிமையில் வாடிக் கிடக்கும் மனம்

என் தேடுதல் புரிந்தும்
அருகிலின்றி தொலைபேசுகின்றாய் நீ...
அலைகளாய் நெளிந்து
இதயம் குடையும் உன் கிளிப்பேச்சில்
வாசனை தெளித்து வைக்கிறது காமம்

நீ கேட்டபடியே
உனக்கான கவிதையொன்றை
உரக்கப் படிக்கின்றேன்...
கவிகேட்டு நெகிழ்ந்து
வெக்கத்துடன் நீ தந்தமுத்தம்
நெய்யூற்றி வைக்க
துளிர்விட்ட காமம் தீயாகிக் கொல்கிறது

சொல்வதில் வெக்கமில்லை எனக்கு!

மழையாய்ப் பொழிகிறேன் முத்தம்
சுகித்துப் பின் சிரிக்கிறாய்

உனக்கும் எனக்குமிடையில்
இரண்டு சமுத்திரங்கள்...
இருந்தும் உன் கூந்தல் வாசனையில்
கிறங்கிப் போகின்றேன்

இனியென்ன...
மறுபடியும் விடியும் வரையில்
உன் நினைவுக் கணகணப்பில்
துருவக் குளிர்காய்கிறேன்

Sunday, October 22, 2006

வதைமுகாம் நினைவுகள்

ஆக்கம்: தனேஸ்

தூக்கம் வராத இன்னொரு இரவில்
வேப்பம் பிசினாய்
மனமெங்கும் தடவிக்கொண்ட நினைவுகள்

நினைவு விலத்தித் தூங்க முயல்கையில்
ஒரு முரசறைவோனின் புலம்பல் போல,
மறுபடி மறுபடி அதே நினைவுகள்

காற்றும் திண்மமாய்ப் போனதோர்
மூடிய அறையில்
சதைகளின் நிறம் சிவப்பு
என்பதாகிப் போன நான்

அம்மணமாக்கி,
என் அந்தரங்களைத் தாக்கி,
சுற்றி நின்று எகத்தாளமிட்ட கரிய உருவங்கள்
முகங்களின்றி முண்டங்களாய்க் கண்ணில் இன்றும்...

சாணி மிதித்த காலாய்
அவர் கொட்டிச் சென்ற வார்த்தை அசிங்கங்களை
துடைக்க விளையும் மனத்தில்
பீறிட்டுப் பாய்கிற ஆத்திரத்திலும்
அசைய மறுத்து முனகலிடும் உடல்

வதைத்தல் நின்ற இடைவெளியொன்றில்
குருதியில் கிறுக்கி வைத்த 'அம்மா'...

ஒரு முரசறைவோனின் புலம்பல் போல,
மறுபடி மறுபடி அதே நினைவுகள்

நெடும்பயணம் செய்தும் விலகாத வலி கொண்டு
அமைதி கிழிக்கும்
நினைவுகளைக் கொளுத்த வேண்டும்
நான் உறங்கிப் போக....

Monday, October 16, 2006

சடங்குகளின் கைதி

ஆக்கம்: தனேஸ்

வாழ்வின் இருண்ட கணங்களிலெல்லாம்
ஒரு குறுகிய சாளரத்தினூடு
பாய்கின்ற ஒளிக்கதிரினைப் போல்
எனக்குள் தோன்றிடும்
கைக்குள் அடங்கிவிடக்கூடிய
ஒரு சிறிய தீப்பொறியாய்
நம்பிக்கையெனும் எனது கவிதைகள்

சேலைத்தலைப்பால் மூடிவிடச்
சொல்லிப் புலம்பும் உன்னிடத்தில்
உதடு பிரித்துச் சொல்லுதலால்
என் வலி குறைவதில்லை எனும்போது
வெறும் சடங்குகளின் கைதியாய் வாழ்வு...

அழுது வடிக்கும் கவிதைகள் எனது
நிழல்களல்ல என்பது தெரிந்தும்
அவற்றை நிறுத்திவிடச் சொல்லும்
அளுத்தம் உன்னிடமிருக்கிறது

நிறுத்திவிடுகின்ற பலவீனம்
என்னிடத்தில் இல்லை!

Sunday, October 15, 2006

மீமெய்ம்மையியல்(Surrealism)

ஆக்கம்: தனேஸ்

தூக்கத்திலே நினைவிலி மனத்தில் தோன்றும் கனவுகளை அந்தத் 'தூக்கக் கனவுகள்' போலவே சித்திரிக்க முற்படும் வித்தியாசமான கலைப்பரிமாணமாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீமெய்ம்மையியல் (surrealism), அதாவது உயர்ந்த உண்மையியல், உருவெடுத்தது. பல்வேறு துறைகளிலும் இக்கலை தாக்கத்தை ஏற்படுத்தியதெனினும், குறிப்பாக ஓவியத்துறையிலேயே இதன் பிரசன்னம் பிரபல்யமானது.

மீமெய்ம்மையியல் விற்பன்னர்கள் வரையும் ஓவியங்களின் கருத்துக்கள் சுலபமாக உய்த்தறியப்பட முடியாதவை (Abstract வடிவங்கள்). பாரம்பரிய ஒவியங்களில் நிஜமான வடிவங்களே பிரதிபலிக்கப்பட்டிருக்கும். ஆனால், மீமெய்ம்மையியல் ஓவியங்களோ நிஜமான வடிவங்களுடன் கற்பனையான அல்லது உளவியல் சார்ந்ததான வடிவங்களையும் முன்னிறுத்திப் புதுமை சேர்த்தன.



உளவியல் திறனாய்வுக்கு வித்திட்ட Sigmund Freud மீமெய்ம்மையியல் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உண்டாக்கினார். உளவியல் பற்றிய அவரது ஆராய்ச்சியில் கனவுலகினைப் பற்றிய ஆய்வுகள் பலவும் அடங்குகின்றன. அவரது சமகாலத்தவரான உளவியலறிஞர் Dr. Carl Jung என்பவர் தனது கனவுகளையும், கற்பனைகளையும் ஓவியங்களாக வரைந்து காண்பித்தார். இவ்வாறு கனவுகளையும் கற்பனைகளையும் வரைவது அல்லது அவற்றிலிருந்து சிந்திப்பது புதுமையான பல முறைகளை கலையுலகுக்கு அறிமுகம் செய்தது. எழுந்தவாரியாக கைபோன போக்கில் கீறுதல் ஓவியத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஒவியங்களை, நவீன ஒவியங்களென்ற பெயரில் நாம் அறிந்திருக்கின்றோம்.

கவிதைகளிலும் இதன் பாதிப்பு இருந்து வருகின்றது. உதாரணமாக, கவிதையெழுதுவதில் ஒரு புதிய முறையை இது அறிமுகம் செய்தது. வார்த்தைகளை எழுந்தவாரியாக, மனம் போகும் போக்கில் எழுதுதல் ஒரு கவிவடிவமாகியது. தமிழில் இப்படிப்பட்ட கவிதைகளின் தெளிவான விபரங்களை அறிய முடியவில்லை.

கற்பனையினை அள்ளித்தெளித்து, படிமங்களையும் குறியீடுகளையும் செறிவாகக் கொண்ட மீமெய்ம்மையியல் கவிதைகளும் எழுதப்பட்டன. அப்துல் ரஹுமானின் பால்வீதி இப்படியானதொரு தொகுப்பாகும்.


கீழேயுள்ள கவிதை, French கவிஞர் Robert Desnos என்பவரின் பிரபலமான மீமெய்ம்மையியல் கவிதையின் தழுவலாகும். இதன் தலைப்பு 'Mobius Strip'. [Mobius Strip என்பது ஒரு பக்கமும் ஒரு விளிம்பும் கொண்டதோர் அமைப்பாகும். ஜேர்மன் கணிதவியலாளர் Mobius இந்த வடிவத்தினை கேத்திர கணிதத்துக்கு அறிமுகம் செய்தார்.]

விநோதமான பரிமாணம்
நான் ஓடிக்கொண்டிருக்கும் பாதை
நாளை நான் திரும்பும் போது
அதாகவே இருக்காது
நேர்கோட்டில் பயணிப்பது
பயனற்றது, சென்றால்
நான் வேறிடத்துக்கே திரும்பவேண்டியிருக்கும்
நான் சுற்றிக்கொண்டேயிருக்கின்றேன்
ஆனால் வானம் மாறுகிறது
நேற்று நானோர் குழந்தை
இன்று இளைஞன்
உலகமே விநோதமானது
ரோஜாக்கூட்டத்திலுள்ள ரோஜா
இன்னொரு ரோஜா போல் இருப்பதில்லை...
இந்தக் கவிதை வாழ்க்கையின் விநோதத்தினை எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது ஒவ்வொருவரினதும் அர்த்தப்படுத்துதலைப் பொறுத்தது.

முரண்பாடுகள்

ஆக்கம்: தனேஸ்

இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும்
விதைக்கப்பட்ட முரண்பாடுகள்
எம் சுயம் கொள்ள முடியாமல்
தடுத்து நிற்கும் சுவர்கள்

தேடுதல்களின்றியே
மரணித்து விட்டது மானிடம்
இன்று வெறும் மாமிசங்கள் மட்டும் தான்
அவையே தான்
முரண்பட்டுக் கிடக்கிறது

வதைப்பவர் அல்லது வதைபடுபவர்
இரண்டில் ஒன்று!

தேர்ந்து கொள்வது
உனது அல்லது
உன் மூதாதையர்
சாமர்த்தியத்தினைப் பொறுத்தது
எம் சுயமிழந்து
கைநழுவிக் கீழே விழுந்து
சிதறிக் கிடக்கிறது நேசம்

இறைதூதர்களும்,
அவதாரங்களும் மாமிசங்களுக்கே
போதித்துச் சென்றனர்
போரிடுதல், தலைகொய்தல்
அவர்கள்
வருந்திக் கொடுத்த வரங்கள்
ஒரு சாக்கடைக் கால்வாயாய்
தேங்கி,
நாறிக் கிடக்கிறது
உனக்கும் எனக்குமான எதிர்காலம்

இனியென்ன,
போரிடுவோம்!

உனக்கும் எனக்கும்
காரணங்களாயில்லை
ஒருவர் மீதொருவர்
இரத்தம் அப்பி விளையாடுவோம்
எமக்கப்பால்
எம் சந்ததிக்கும் கற்றுத்தருவோம்
இல்லாவிட்டால்
கற்றுத்தந்த கடவுள்கள்
கவலையுற மாட்டாரா?

உன் உறவுகள்
என் உறவுகள் பலியிடுவோம்
அவர்கள் தலைகள் கொண்டு
மாலை செய்து மாட்டிக்
கூத்திடுவோம்

காரணங்களாயில்லை
உனக்கும் எனக்கும்!

ஈராக்

ஆக்கம்: தனேஸ்

உரத்த குரலில்
அழுதுவிடுங்கள்
உங்களுக்குச் சொந்தமானவை
திருடப்பட்டபோது
உங்களது குரல்வளைகள்
உங்களைக் கொண்டே
நெரிக்கப்பட்டபோது
மெளனித்திருந்தீர் என்பதற்காக
இன்னும் உரத்தகுரலில்
அழுதுவிடுங்கள்

இருண்டு கிடக்கும்
உங்கள் தெருவெங்கும்
வடிகிறது இரத்தம்
பயணிப்பவரோ
கண்களை மூடியபடியே செல்கிறீர்கள்
உங்களுக்குள்ளே
விரிசல்கள் தோன்ற
வித்திட்ட சகுனியரோ
உங்களை வைத்தே
உங்களை வெல்கிறார்கள்

அவர்கள்
எண்ணை வளர்க்க
உங்கள் தேசமெங்கும்
தீ மூட்டினர்

பற்றியெரியும் தீயில்
உங்கள் பாலகரையிட்டு
அவர்கள் விரும்பியபடியே
நீங்களும் குதிக்கின்றீர்
இனியென்ன,

உங்கள் கிணறுகளில்
அவர்களின் துலா,
கண்களைக் மூடியபடியே
தெருவெங்கும் குடங்களை
ஏந்தும் நீங்கள்....

மெளன கீதங்கள்

ஆக்கம்: தனேஸ்
*
உன் மெளனத்தை
மொழிபெயர்க்க-நான்
சேமித்து வைத்துள்ள
இரவுகளைத் திருடுகின்றன
உனது நினைவுகள்

*
மீண்டும் காலையில்
உன் மெளனத்தில்
கயிறு திரிக்கும்
என் எண்ணங்கள்

*
பேசுகின்ற
உன் கொலுசுச் சத்ததிலேயே
உனக்கான உலாவுக்காகப்
புறப்பட்டுவிட்டது என் மன ரதம்

*
நீ பேசிக்கொள்ளாத
வார்த்தைச் சமுத்திரத்தில்
மெளன முத்துக்களைக்
கண்டெடுத்து வைத்துள்ளேன்!

*
உன் உதட்டு மொட்டுக்களின்
பூத்தலுக்காக
காத்துக்கிடக்கும் மனவண்டு...

*
என் ஞாபகப் புரவி
பார்க்குமிடமெல்லாம்
பரந்து கிடக்கிறது உன்
மெளனப் புல்வெளி

Thursday, October 12, 2006

திசை மாறிய நதி

ஆக்கம்: தனேஸ்

இந்த நான்
ஒரு திசைதிருப்பப்பட்ட நதியாக
அறிமுகமில்லாத கரைகள் தழுவியபடி
புதிதாய் அலைகிறேன்

நான்
எழுதாத கவிதைகளின்
வினோதமான சுரங்கள்
என் காதுகளுக்குள்

அங்கு
தெற்குப் புறத்தின்
நீண்ட சர்ப்பங்கள் - என்
நிழலினையும் துரத்த
என் புதைகுழியின்
இடம் மாறிப்போனது

எனது கண்ணாடியில்
இன்னொருவனின் விம்பம்;
இன்னும் பழைய நான்
அப்படியே இருக்கிறேன்
புதிதாக்கிக் கொள்ள
என்ன இருக்கிறது என்னிடம்

அங்கு
என் உறவுகளின் குருதியில்
சிவப்பாகிய தாமரைகள்
காத்திருக்கிறது புத்தருக்காக

இன்னும் மானிடம் பற்றி
எழுதாத கவிதைகள்
புழுவாகி நெளிகிறது
என் காதுகளுக்குள்