ஆக்கம்: தனேஸ்
தோழி!
என் வானம்இருண்டே கிடக்கிறது
நீ அதில் நிலவினை வரைவாயா?
இந்தப் பாலையில்
அன்பு நதிகள்
என்றுமே பாய்ந்ததில்லை
காய்ந்து சருகாகிப்
போகுமுன்னர்
உயிரணக்கள் ஒவ்வொன்றும்
உன்னை நோக்கியே தொழுகின்றன
இந்த வெற்றுக் காகிதத்தை
ஓவியமாக்கும் பக்குவம்
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கும்
நித்தமும் தரித்திரம் சூழ
விடியலுக்காய் ஏங்கி
உன் காதலுக்காக(த்)
தாகித்துக் கிடக்கிறது மனம்
என் நிலையைக் கண்டு
நீ விடும் கண்ணீர்
இரவல் விழிகளினால் தானா?
தோழி!
என் இருண்ட வானத்தில்
நிலவினை வரைவாயா?
என் காதல் உனக்குத்தெரிந்திருக்கிறது
என் சோகமோ
உன்னையும்பற்றிக்கொண்டது
இருந்தும்
ஊற்றெடுத்து,முட்டி மோதி
பிரளயமாய்ப் புறப்பட்டுவிட்ட
என் காதலுக்கு
அறிமுகமில்லாமல் விலகியிருக்கிறாயே
உன் பதிலில்தான்
இந்தப் பிரபஞ்சத்தில்
என் இருப்பிடம் இருக்கிறது
தெரிகிறதா உனக்கும்?
தோழி!
என் இருண்ட வானத்தில்
நிலவினை வரைவாயா?
No comments:
Post a Comment