Friday, October 06, 2006

ஒரு பிரிவும் சந்திப்பும்

ஆக்கம்: தனேஸ்

இலையுதிர்த்தி
பனியுடுத்திய ஓர் பகல்
போர்நடத்தி
தோல்வியுற்ற வெய்யில்
போதாதென்று
குளிரோடு சதிராடும் காற்று...

குளிருடையும் மீறி
உறைகிறது தேகம்

தொடர்மாடிக் கட்டடத்தின் முன்னே
என்னைத் தாண்டி
சட்டென்று எதிரே அவள்

சிறிது தயக்கத்துடன்
திரும்புகையில்
அவள் பார்வை...

இனியொரு சந்திப்பு
நேருமென்று அறியாமல்
அன்று,
பிறர் பார்வை தவிர்த்து
பனைவெளிதாண்டிப் போய்
அலை நெழியும் கரையொன்றில்
அவளுடனான பிரிவு

துளிப்பொழுதும்
பிரியோம் எனக்கொடுத்த
வார்த்தை மீறி
பிரிதலுக்கான விடைபெறுதல்
நிகழ்ந்தது

ஒருவர் மீதொருவரின் குற்றச்சாட்டு
ஓரிரு கண்ணீர்த் துளிகள்

முன்பு,
இதே கரையின் மறுபுறத்தே
வெளிச்ச வீடு அருகே
காதலராய் முதற் சந்திப்பு

காதல் பற்றி
காதலின் மகத்துவம் பற்றி
பத்தி பத்தியாய்
பரிமாறிக்கொண்ட கவிதைகள்
இன்னமும் இருந்தால்
அழித்து விடுவதாய்
ஒருவருக்கொருவர் சம்மதிக்க
புரிதலுடன் நிகழ்ந்தது பிரிவு

இன்று
எதிர்பாராது நடந்த
குளிர்தேசத்துச் சந்திப்பில்
இனம்தெரியாதோர் உணர்வு

அவளுடன் பேசுதல் முடியாது
எனினும்
கடலென விரிகிறது நினைவு

என் மனமறிந்தாள் போலும்
விலகி மறைகிறாள் குளிரில்...

1 comment:

Chandravathanaa said...

நன்றாயிருக்கிறது கவிதை.

காதல் பற்றி
காதலின் மகத்துவம் பற்றி
பத்தி பத்தியாய்
பரிமாறிக்கொண்ட கவிதைகள்
இன்னமும் இருந்தால்
அழித்து விடுவதாய்
ஒருவருக்கொருவர் சம்மதிக்க
புரிதலுடன் நிகழ்ந்தது பிரிவு

இது ஒரு வலியை அழகாககச் சொல்கிறது.