Wednesday, October 04, 2006

ஒரு நண்பனின் மரணம் பற்றி...

ஆக்கம்: தனேஸ்

எம் கூடுகளே
கூண்டுகள் ஆக்கப்பட்டபோது
வேலிகள் ஒவ்வொன்றாய்த்
தீயிலிடப்பட்ட போது - உன்
தோள்களில் துப்பாக்கிகள்
குடிவந்தது புதுமையில்லை

உன் இயல்பு அப்படி!

கல்லூரிச் சுவர்களில்
நீ கிறுக்கி விட்டுப் போன
"ஷே(Che)" பற்றிய குறிப்புகள்
இன்னமும் இருக்கிறது

எழுதிய நீ மட்டும் இல்லை!

அன்பின் நண்பா,
எதிர்காலப் பூமாலைக்காக
நாராகிக் கொண்டு
காய்ந்து கிடந்தாலும் -நீ
பூக்களே சூடிக் கொள்ளும் பூ

உன்னையே உருக்கிச்
சிலைசெய்து கொண்டு-அதன்
அழகைஆகாயத்திலிருந்து
பூக்களிட்டு ரசிப்பேன் என்றாய்

எம் பறவைக் கூட்டில்நீ
எடுத்துக் கொடுத்த
சுள்ளிகளும் இருக்கும்

நீ விளக்கை அணைக்கவிழுந்த
விட்டில் அல்ல
தீயில் விழுந்த மழைத்துளி

தீயை மழை வெல்லும்!

மட்மீட்பிற்கான பால்வீதியில்
நட்சத்திரமான உனது வெளிச்சத்திலேயே
பாசறைகளில் இன்னமும்
பயிற்சிகள் நடக்கிறது

நீ வாழ்த்திச்சென்ற சமுதாயம்
உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறது

9 comments:

Chandravathanaa said...

நல்ல கவிதை

தமிழ்நதி said...

எனது வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி நண்பரே!

‘ஒரு நண்பனின் மரணம்’நெகிழவைத்தது. திலீபன் அண்ணா பற்றித்தானே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
“நீ விளக்கை அணைக்க விழுந்த
விட்டில் அல்ல
தீயில் விழுந்த மழைத்துளி” என்ன சொல்வது… விட்டுவந்த ஊரை வார்த்தைகளால்தானே தொடமுடிகிறது. இவ்வளவு நன்றாக எழுதுகிறீர்கள்…. இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்…?

தனேஸ் said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி Tamilnathy. ஆமாம், இதனை திலீபனை மனதில் வைத்தே எழுதினேன். இந்த வகையில் ஆக்கங்களைப் பதிவு செய்யலாம் என்பது எனக்கு அண்மையில் தான் தெரிய வந்தது.

Anonymous said...

கவிதை நன்றாக உள்ளது.
இவ்வாறே தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள் நெல்லி.
எமது அனுபவப் பதிவுகள் விரைவில் அடுத்தவர் உள்ளங்களைச் சென்றடையும்.

மலைநாடான் said...

நெல்லி!

அழகாக வடித்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலாக இருக்கிறது. பாராட்டுக்கள்
நன்றி!

enRenRum-anbudan.BALA said...

நல்ல கவிதை !

மனதைத் தொட்டது, நண்பரே !

தனேஸ் said...

பஹீமா, மலைநாடான், பாலா உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி...

கானா பிரபா said...

நல்ல கவிதை, தொடருங்கள்

BadNewsIndia said...

இனிமை!
திலீபன் யார்? அவரை பற்றியும் ஒரு பி.கு போட்டால் நன்றாய் இருக்கும்.