Monday, October 02, 2006

வேலி

ஆக்கம்: தனேஸ்

மார்கழி இரவுகளில்
இடியிடித்துவானம்
கிழித்துப்பெய்யும் பெருமழை

வீட்டின் கூடத்தில்
கொளுத்திய விளக்கில்
மோதிப் பலியாகும்
ஈசல்கள் கூட்டம்
பெருக்கிப் புறந்தள்ளுவாள் அம்மா...

மழைக்குளிரில்
போர்வையிறுக்கி கண்கள் மூட
விரியும் பல வாலிபக் கனவுகள்

மறுநாள் காலை
முந்தைய இரவின் மழையில்
தெருவினில் முளைத்துக் கொண்ட
சிறுநதி பார்க்க வலம் வருவர்
ஊர்ப்பெருசுகள்

தெருவில் செல்லும் சிறுவர்
ஒருகால் முன்வைத்து
மறுகாலால் நீருதைத்து
நுட்பமாகஒலியெழுப்பி மகிழ்வர்

முன்பொரு பருவத்தில்
அப்பாவின் உழைப்பில்
முட்கதியாள் வேலி
பற்றிக் கட்டிய பனையோலை
நழுவித் தரை தடவிக் கிடக்க,
அதைச் சரிசெய்யக் கூறி
சமர் புரிவாள் அம்மா...

அம்மாவின் குரல்
ஈரநிலத்தில் தெருவெங்கும் கேட்கும்
வெறுப்புடன்போர்வை விலக்கி
கனவுகள் நினைத்துக் களித்து
அம்மாவின் தேநீர் சுவைத்து
தெருவிறங்குவேன்

என்வயதுப் பெண்ணொருத்தி,
தண்ணீர்க் குடத்துடன் தெருகடப்பாள்
அவள் அழகில் கிறங்கிப்பின் சரியாகி,
எதிர்வீட்டு மதில் பார்த்து
என் வீடு சபித்து
வேலி சரிசெய்தல் தொடங்கும்...

3 comments:

Chandravathanaa said...

அழகாக எழுதுகிறீர்கள்.
ஊர் ஞாபகங்களும் வந்தன இக் கவிதையைப் படிக்கும் போது.

தனேஸ் said...

நன்றி அக்கா,
புலம்பெயர் வாழ்வில் என்றுமே விலகாமல் கூட வருபவை பழைய ஞாபகங்களல்லவா!!

Anonymous said...

நண்பரே இலகுத் தமிழில் அழகுக் கவி....
மனதாரப் பாராட்டுகிறேன்....