Sunday, October 22, 2006

வதைமுகாம் நினைவுகள்

ஆக்கம்: தனேஸ்

தூக்கம் வராத இன்னொரு இரவில்
வேப்பம் பிசினாய்
மனமெங்கும் தடவிக்கொண்ட நினைவுகள்

நினைவு விலத்தித் தூங்க முயல்கையில்
ஒரு முரசறைவோனின் புலம்பல் போல,
மறுபடி மறுபடி அதே நினைவுகள்

காற்றும் திண்மமாய்ப் போனதோர்
மூடிய அறையில்
சதைகளின் நிறம் சிவப்பு
என்பதாகிப் போன நான்

அம்மணமாக்கி,
என் அந்தரங்களைத் தாக்கி,
சுற்றி நின்று எகத்தாளமிட்ட கரிய உருவங்கள்
முகங்களின்றி முண்டங்களாய்க் கண்ணில் இன்றும்...

சாணி மிதித்த காலாய்
அவர் கொட்டிச் சென்ற வார்த்தை அசிங்கங்களை
துடைக்க விளையும் மனத்தில்
பீறிட்டுப் பாய்கிற ஆத்திரத்திலும்
அசைய மறுத்து முனகலிடும் உடல்

வதைத்தல் நின்ற இடைவெளியொன்றில்
குருதியில் கிறுக்கி வைத்த 'அம்மா'...

ஒரு முரசறைவோனின் புலம்பல் போல,
மறுபடி மறுபடி அதே நினைவுகள்

நெடும்பயணம் செய்தும் விலகாத வலி கொண்டு
அமைதி கிழிக்கும்
நினைவுகளைக் கொளுத்த வேண்டும்
நான் உறங்கிப் போக....

4 comments:

மலைநாடான் said...

நெல்லி!

இந்த வலிகளை அனுபவித்திருக்கிறீர்களா? . மனிதம் உடைந்துபோகும் நினைவுகள்.

நன்றி!

ஒரு பொடிச்சி said...

//...
வதைத்தல் நின்ற இடைவெளியொன்றில்
குருதியில் கிறுக்கி வைத்த 'அம்மா'...

ஒரு முரசறைவோனின் புலம்பல் போல,
மறுபடி மறுபடி அதே நினைவுகள்"//

இத்தகைய வரிகள் சொல்லும் (உலகில் எங்கும் எ/இப்போதும் நடந்துகொண்டிருக்கிற) அனுபவங்கள் உடனடியாய்ப் பாதிக்கின்றன .
ஏனெனில் இவற்றை அனுபவித்தவர்கள் எதையும் கடந்துபோவதில்லை. அது ஒருவளி/னின் ஆன்மாவை அகற்றி விடுகிற ஒன்றுதானே.

கவிதையைப் பற்றி என்றால்: இடையிடையே வருகிற

வேப்பம் பிசினாய்
ஒரு முரசறைவோனின் புலம்பல் போல

போன்ற
சில உவமான/உவமேயம்(?) பிடித்திருந்தது

தனேஸ் said...

மலைநாடான்:
ஆமாம்... இவை எனது அனுபவத்தில் சிலவே... ஈழத்தில் இப்படி எத்தனையோ இன்னும் நடக்கிறது. இன்னும் நடக்கும் என்பதென்பது தலைவிதி தானா?

நன்றி!

ஒரு பொடிச்சி:
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Chandravathanaa said...

வதையின் வலியை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்:
வார்த்தைகளிள் கோர்ப்புகள் மிகவும் வலியதாய், வலியை உணர்த்துவதாய், மனதைத் தொடுவதாய் அமைந்துள்ளன.